சோஷியல் மீடியா பக்கம் போனால் 'கொரியன் ஸ்கின் வேண்டுமா..?' 'Glass skin வேண்டுமா...?' என்று ஆர்வத்தைத் தூண்டும் வீடியோக்களை அதிகம் பார்க்க முடிகிறது.
சோஷியல் மீடியா பக்கம் போனால் 'கொரியன் ஸ்கின் வேண்டுமா?' 'கண்ணாடி சருமம் வேண்டுமா?' என்று ஆர்வத்தைத் தூண்டும் வீடியோக்களை அதிகம் பார்க்க முடிகிறது. அந்த வீடியோக்களில் சொல்லப்படும் சிகிச்சைகளைப் பின்பற்றுவதும் பொருள்களை உபயோகிப்பதும் எத்தனை பேருக்கு சாத்தியம்? தவிர, புறப்பூச்சுகளைவிட, உள்ளுக்குள் சாப்பிடும் உணவுகள் மூலமே நிரந்தரமான, ஆரோக்கியமான அழகைப் பெற முடியும். அந்த வகையில் உங்களுக்கும் glass skin வேண்டுமென விரும்பினால், உணவின் மூலம் அதை வசப்படுத்திக் கொள்ள எளிமையான வழிகளைப் பகிர்கிறார் ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கிவி, பசலை, பூசணி, கரட் போன்றவற்றில் இருக்கும் பீட்டா-கரோட்டின், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். இந்த உணவுகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், வயதான தோற்றத்தைத் தடுத்து கொழுப்பு சவ்வுகளைப் பாதுகாக்கும். விற்றமின்கள்: சரும அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் பல வைட்டமின்களின் பங்கு உண்டு! வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், வைட்டமின் ஈ நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள், வைட்டமின் டி உள்ள பால் அல்லது நட்ஸ் மில்க் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த வைட்டமின்கள் அனைத்தும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையையும் ஒட்டுமொத்த பிரகாசத்தையும் மேம்படுத்தக்கூடியவை. செலினியம்: செலினியம் நிறைந்த பிரேஸில் நட்ஸ், சூரியகாந்தி விதைகள், மீன் ஆகியவை சருமத்தின் இளமைத் தோற்றத்துக்கு உதவக்கூடியவை. இவை சரும நிறத்தை மேம்படுத்தி, பளபளப்பாக்கக்கூடியவை. துத்தநாகம்: ஸிங்க் எனப்படும் துத்தநாகச் சத்து நிறைந்த உணவுகளை உங்கள் சருமத்துக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நட்ஸ், பருப்புகள், முழுத் தானியங்கள், பால் மற்றும் பால் பொருள்கள் ஆகியவற்றில் துத்தநாகச் சத்து அதிகமிருக்கும். இது சருமத்தை வறண்டுபோகாமலிருக்க இயற்கையான எண்ணெயைச் சுரந்து, புறச்சூழலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் சருமத்தைக் காக்கும். ஆந்தோ சயனின்: பெர்ரி மற்றும் செர்ரி வகை பழங்களில் ஆந்தோ சயனின் சத்து அபரிமிதமாக இருக்கும். எனவே, கலர்கலரான பெர்ரி மற்றும் செர்ரி வகை பழங்களையும் உங்கள் உணவில் அத்தியாவசமாக மாற்றுங்கள். பதப்படுத்தாத ஃப்ரெஷ் செர்ரி, ப்ளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, க்ரான்பெர்ரி, ராஸ்பெரி, பிளாக் பெர்ரி என எல்லாவற்றையும் மாற்றி மாற்றி சேர்த்துக்கொள்ளுங்கள். இவை சரும அழற்சியைத் தடுப்பதோடு, சருமம் அதன் மீள்தன்மையோடும் இளமையோடும் இருக்க உதவும். இவை தவிர... கரட், பீட்ரூட், ஒரேஞ்சு, தக்காளி ஆகியவற்றில் தினமும் ஏதேனும் ஒரு ஜூஸ் குடிக்கலாம். இவற்றில் மிகக் குறைந்த அளவு சீனியோ, சிறிதளவு உப்பும், மிளகுத்தூளுமோ சேர்த்துக் குடிப்பது சிறந்தது. மாதுளை, தர்பூசணி போன்றவற்றை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பழமாகவோ, சீனி சேர்க்காத ஜூஸாகவோ எடுத்துக்கொள்ளலாம். அதேபோல நெல்லிக்காய், புதினா, கொத்தமல்லி, வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்த ஜூஸ் சருமத்தைப் பளபளவென மாற்றும். பழங்கள், காய்கறிகளுக்கு அதிகம் செலவு செய்ய முடியாது என்பவர்கள், இளநீர், அதன் வழுக்கை, நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம். காய்கறி சாலட், ஃப்ரூட் சாலட், பொரியல், ஜூஸ் என எல்லாவற்றிலும் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துக் குடிப்பதும் நல்ல பலன்களைத் தரும்.
Leave Comments